செவ்வாய், 17 ஜூலை, 2018

அசோகமித்ரனும் ஜெயமோகனும்

அசோகமித்ரனும் ஜெயமோகனும்
=====================================================ருத்ரா

இவர்கள் இருவரின் எழுத்துக்களையும்
தின்று செரித்து
"செர்ரி ப்ளாஸமாய்" புஷ்பித்துக்கொண்டிருப்பதாக‌
புல்லரிக்கும்
ஆர்.வி எனும் ("சிலிகான் ஷெல்ஃ ப்")
நம் எழுத்தாள நண்பர்
அவர்கள் இருவரில்
முதல்வரை இரண்டாமவர்
மட்டம் தட்டியது பிடிக்காமல்
தமிழ் மணம் வலைப்பூவில் தன்
எழுத்து மகரந்தங்களை கொட்டித்தீர்த்திருக்கிறார்.
மிகவும் அருமையான பதிவு.

ஆனால் அவர்கள் இருவருமே
சொல்லுக்குள் நிழலாட்டம் ஆடுபவர்கள்.
அவர்கள் சிறந்த எழுத்தாளர்கள்.
ஆனால்
சமுதாய நரம்புப்புடைப்புகள்
கொஞ்சமும்
தன் பேனாக்கூட்டுக்குள்
கரு தரிக்க விடக்கூடாது என்பதில்
கவனமாக இருப்பார்கள்.
ஒரு பிடி சோறு பற்றி
எழுதினாலும்
அதில் சோப்புக்குமிழிகளில் தோன்றும்
நெழியல்களும் வண்ணங்களும்
அல்லது வயிற்றுப்பசியின்
"சில்ஹௌட்"சித்திர விளிம்பின் சோகங்களும் கூட‌
இருக்கும்.
இருவரும் தன்னைச்சுற்றிய இறுக்கத்தின்
அசுரப்பிடியின்
கோரத்தை உடைத்துக்கொண்டு வரும்
பட்டுப்பூச்சிகளாக‌
வண்ணக்குழம்பின் லாவாவை
வாக்கியங்களுக்குள்
வடிவமைப்பார்கள்.
ஆனால் அந்த சிகப்பு விடியல் மட்டும்
அவர்களுக்கு
ஆபாசமோ ஆபாசம்.
இந்த வரிசையில்
ஜெயகாந்தன் கொஞ்சம் விலகித்தான்
நிற்கிறார்.
அந்த ஒரு பிடி சோற்றில்
தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்
வியர்வையின்
விழிப்புகள் தரும் "அனாடமியை"
எழுத்து உமிழல்களில்
சூடு பறக்க நமக்கு படைத்திருக்கிறார்.
ஹேலுசினேஷன் என்பது மட்டுமே
இந்த மேட்டிமைக்காரர்களின்
தலையணை மேடுகள்.
அந்த சஞ்சரிக்கும்
கனவுக்காடுகள்
சில சமயங்களில் சப்பாத்திக்கள்ளிகளின்
முட்கள் கொண்டு
அதை ரவி வர்மா ஓவியமாக்கி
ரத்தச்சேறு தெளித்து
விளையாடிக்கொள்ளும்.
ஆர்.வி அவர்கள்
இந்த மயக்கப்போதையின்
கஞ்சாப்பூக்களை
தன் பூக்குவளையில் செருகிக்கொண்டு
சித்திரவதைப்படத்தேவையில்லை.
எப்படி எழுதினாலும்
வேத இனிப்பு சுலோகங்களை
வேறு வித பரல்கள் ஆக்கி
தங்கள் கிலுகிலுப்பைகளில்
குலுக்கி ஓசை எழுப்பும்
இந்த "அடிப்படை வாதிகளின்"
அடிக்குறிப்புகளை உணர்ந்துகொள்ளும்
நுண்மாண் நுழைபுலத்தோடு
விழித்திருங்கள் நண்பர்களே!
மரப்பாச்சிகள் இல்லை நீங்கள்.
இவர்கள் சொடுக்கும்
மதத்தின் அதிரடி மின்னல்களில்
பார்வை இழப்புகள் ஏற்படாமல்
காத்துக்கொள்ளுங்கள்
சிந்தனைச்சிற்பிகளே!

========================================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக