திங்கள், 16 அக்டோபர், 2017

கிண்ணத்துள்ளா? கமலின் புயல்?


கிண்ணத்துள்ளா? கமலின் புயல்?
================================================ருத்ரா

"ய ஸ்டார்ம் இன் ய டீ கப்?"
கிண்ணத்திற்குள்ளா
கமலின் புயல்?
ஆனந்தவிகடன் பக்கங்கள்
காரசாரமான அரசியல் பக்கங்களின்
ஆவணப்பக்கங்களாகும்படி
அவர் சமுதாய அவலங்களை
அடித்துப்பிழிந்து அலசியிருக்கிறார்.
தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு
கொடுக்க வேண்டிய‌
சிவப்பு சந்நிதான மேன்மையை
உயர்த்திக்காட்டியிருக்கிறார்.
அந்த கருப்புச்சட்டையை
அதற்காக‌
சிவப்பு சட்டையாய்
வர்ணம் மாற்றி
சிந்தனையை கூர் தீட்டினால்
பொறி பறக்கத்தான் செய்யும்.
வெள்ளைக்காரன் அவிழ்த்துவிட்ட‌
இந்த நெல்லிக்காய் மூட்டையில்
நாமும் தான் பார்க்கிறோம்
சாதி மதம் இனம் மொழி
லஞ்சம் ஊழல்
மாட்டிறைச்சி மாட்டுச்சாணம்
மற்றும் தொ(ல்)லைக்காட்சி கொசுக்கடிகள்
எல்லாம் தான்.
சினிமாவையும் அதில்
சேர்த்தால்
கமல் இப்படியும் அப்படியுமாக‌
நெளியத்தான்  செய்வார்.
இந்தப்பட்டியலில்
சத்யஜித் ரே
அடூர் கோபால கிருஷ்ணன்களையெல்லாம்
மாட்டு அடியாய் அடித்து
சினிமாவை வேண்டாம் என்று
டிங்கரிங் செய்யமுடியாது.
சினிமா நிழலை
சமுதாயத்தின் கோடிக்கால் பூதமாக‌
செதுக்கும் சிற்பிகள் அவர்கள்.
அதில் ஏறியிருக்கும் உஷ்ணம்
ஒரு ஊழித்தீயின் கரு.
கமலும் அந்தப்பட்டியலில் வருகிறார்.
பொது உடைமை சித்தாந்தவாதிகள்
இன்னும் அவருக்குள்
ஒளிந்திருக்கும்
குட்டி பூர்ஷ்வா பூனைக்குட்டியைப்பற்றிய‌
கணிப்புகள் ஒரு புறம் இருந்தாலும்
"விடியல் மத்தாப்பு" கொளுத்த‌
இவர் போதும் என்று நினைக்கலாம்.
ஆனந்தவிகடனில் இவர் முகநரம்புகள்
"அன்பே சிவம்" படத்தில்
காட்டும் அந்த உணர்ச்சி கொந்தளிக்கும்
முக நரம்புகள் தான்.
காயப்பட்டு கிடக்கும்
ஒவ்வொரு ஓட்டுச்சீட்டுக்கும்
ஐ.நா,த்தனமாய் உலக சமாதானத்தையும்
மானிடத்தையும் மருந்து பூசி
சரி படுத்த நினைக்கும்
சமுதாயபிரக்ஞை அவரிடம்
முட்டித்தளும்புகிறது.
சினிமா வசூல்களை தரப்படுத்தும்
அந்த ஏ ஏரியாவும்  பி ஏரியாவும்
வேண்டுமானால்
கமலின் பொன்னுலகை படைக்க
முன் வரலாம்.
ஆனால் சி ஏரியா எனும்
வியர்வை நாற்றமெடுத்த
அந்த உண்மை ஜனநாயத்தின்
உள்ளத்துள் ஊடுருவ
எம் ஜி ஆர் களின் குல்லாவை
எங்கே போய் வாங்குவார் ?
ஈக்கள் கூட மொய்க்கத்தயங்கும்
சவக்கிடங்குகளும் பாதாள சாக்கடைகளும் தான்
நம் பாரதத்தின் புத்திரர்கள்
படுத்துறங்கும்
"பாற்கடல் விரிப்புகள்".
அந்த பரந்தாமர்கள் பஞ்சசமர்களாய்
குரூரமாய் காட்சிப் படுத்தப்படும்
அந்த மானிட அநீதிகளைச்
சுட்டுப்பொசுக்க இவர்
என்ன ஆயுதம் வைத்திருக்கிறார்?
அறிவு ஜீவிகளின்
ஆலாபனைகளையும்
ஆரோகண அவரோகண அலங்காரங்களையும்
வைத்துக்கொண்டு
இவர் என்ன செய்ய முடியும்?
திராவிடம் இல்லாத
இந்திய நாகரிகப்  படம்
ஒரு மூளியான "படுதா"தான்
என்ற புள்ளியிலிருந்து
அவர் தொடங்கியிருக்கிறார் என்றால்
அதை நாம் வரவேற்க காத்திருக்கிறோம்.
ஊழல்
எனும் ஆணிவேரும் சல்லிவேர்களும்
ஆக்டோபஸ்களாய்
கவ்விப்பிடித்திருப்பதை ...
மின்னணுப்பொறிக்குள் கூட
ஒரு வைரஸாய் விரிவியிருப்பதை
எப்படி ஒழிக்கப்போகிறார்?
பிக்பாஸ்  அணுகுமுறைகள் எனும்
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா  தாம்பாளம் எல்லாம்
வழுக்கிக்கொண்டு போய்விடும்.
விகடனில்  அவரது புயலின் கரு
தேர்தல் துணிவிரிப்பில்
கன்னிகுடம்
உடைத்துக்காட்டும் போது தான் தெரியும்.
அவர் ஒன்றும்
புயல் என்று சொல்லி
மயிலிறகைக்கொண்டு
காது குடைந்து கொண்டிருக்கவில்லை.
ஒரு சுநாமியை
பழக்கி வைத்துக்கொண்டு
இந்த
அவலங்கள் மீதும் அதர்மங்கள் மீதும்
"லாவா"வாய் பாய்ந்து உமிழ்வார்
என்று ஒரு சிக்னல் தெரிகிறது.
அவர் புயலுக்கு கை கொடுப்போம்!
அவர் மனதுக்கும்
நம் மனதைக்கொடுப்போம்.!

=====================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக