புதன், 20 செப்டம்பர், 2017

புதிய வானம்



புதிய வானம்.
=====================================ருத்ரா

வானத்தை நோக்கி
கைகூப்புகிறோம்
படைப்பின்
புதிர் புரியவில்லை என்று.
கவலைகள்
கரையான்களாய்
நம்மை அரித்துவிடும்போது.
கடலின் வயிறு கொந்தளித்து
நம் கட்டிடங்களையெல்லாம்
உருட்டித்தள்ளி விடும்போது.
யாரோ ஒரு பலம் பொருந்தியவன்
அங்கே இருந்து
நம்மை நோக்கி நாக்கு துருத்தி
நரகம் தருவதாய்
நம்மை மிரட்டும்போது.
இல்லாவிட்டால்
கோடி கோடி பொன்மழையை
நம் மீது தூவுவதாய்
அபிநயம் செய்யும்போது.
ஒரே ஒரு தடவை அதை
உற்றுப்பாருங்கள்.
நம் அறிவின் கேள்வித்திரி முனை
"பிக் பேங்க்" எனும்
விடைப்பாய்
நம் எல்லா இருப்புகளின்
வாசல்களுக்கு
ஒரு சாவித்துவாரமாய்
தெரியுமே
அது உங்களுக்கு தெரிகிறதா?
உற்று நோக்கல் எனும்
உங்கள் அம்புமுனை
ஒரு போதும் மழுங்குவதில்லை.
முன்னோர் சொல்லிப்போன
வசனங்கள்
உங்கள் சிந்தனையில்
கூர் தீட்டப்படவேண்டும்.
ஆம்
அந்த வான உச்சியிலிருந்து
சிந்தியுங்கள்.
பரிணாமம்
உங்களை முண்டியடித்துக்கொண்டு
உந்திக்கொண்டு போகிறது.
குப்புற விழுந்து விடாதீர்கள்.
அது எப்போதுமே
உங்கள் புதிய வானம்.

===================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக