பக்கங்கள்

ஞாயிறு, 29 ஜூன், 2025

பிம்பம்

 

இது என்ன?

_____________________________________


என்ன அழகிய முகம்?

அந்த புருவ அடர்த்தியின் 

வளைவுகளுக்குள்

ஒளிந்து ஒளிந்து

கண்ணாமூச்சி விளையாடும்

கரு விழிகள்.

அவை மயிலிறகுகளா?

மலைகளையே பிளந்து தூளாக்கும்

கண்ணி வெடிகளா?

அவற்றைப்பார்க்கும் கண்களின்

வழியாக 

கையைக்கட்டி வாய் புதைத்து

தானே விலங்குகள் மாட்டிக்கொண்டது போல்

தவிக்கும் உள்ளம்

குழைந்து போகிறது.

நெகிழ்ந்து போகிறது.

ஏன்

ஆவியாகவே கரைந்து எங்கோ

காணாமல் போகிறது.

இது என்ன?

என்ன இது?

அவளா?

அவனா?

உயர்தினையா?

அஃறிணையா?

என்ன பெயர்?

இடுகுறியா?

காரணமா?

இது தான் அந்த சுழல்.

இதில் உழன்று பார்த்தால் தான்

அது புரியும்...

அல்லது புரிந்து கொள்ள‌

பயப்படுவது போல்

நெளியும்.

இந்த உணர்ச்சியின்..கிளர்ச்சியின்

சுரங்கம் புகும் வயதுகளை

மின்னல் பூச்சிகளாய்

மொய்க்கவிடும் கால கட்டம்

தாண்டும் நிலையில்

நீயும்

அந்த இறக்கைகளைக் கட்டிக்கொண்டு

வானத்தில்

பறந்து கொண்டிரு.

பார்...பார்..

அதற்குள் சட்டென்று

அந்த சிறகுகள் முறிந்து விட்டன பார்.

அந்த சிறகுகுப்பைகளை

சேகரித்துக்கொண்டு

அதன் மிச்ச சொச்சங்களில்

உனக்கு நடப்பட்ட மைகற்களை

குறி வைத்துக்கொண்டு

பயணம் செல்.

எங்கே?

எதற்கு?

அவ்வப்போது 

அந்த நெருப்பு உன்னை இழுத்துக்கொண்டு போகும்.

அந்தப்பொறியே

உன்னை நகர்த்திக்கொண்டு

போய்க்கொண்டே இருக்கும்.

வாழ்க்கை என்ற பாறாங்கல்

உன் தலை மீது

விழுவது போலும் 

விழாதது போலும்

பிம்பம் காட்டிக்கொண்டே இருக்கும்.

புயல்களைப்போல‌

அவை "ரோலர் கோஸ்டர்களா?"

இல்லை

இற்று விழுந்து கிடக்கும்

"ஈசிச்சேர்களா?"

அந்த கந்தல் குல்லாய்க்கு

காக்காய்ச்சிறகுகளை

செருகிக்கொன்டு நடத்தும்

ராஜாங்கமா?

பாதைகளின் அனக்கொண்டாக்கள்

கனவுகளின் குறுத்தெலும்புகளை

நொறுக்கிக் கூழாக்குமுன்னே

சென்று வா?

வென்று வா?

சந்திப்போம்.

_______________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக