பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2019

எழுச்சிப்பொங்கல்

எழுச்சிப்பொங்கல்
===================================ருத்ரா

மண்பானையில்
பச்சரிசிப்பொங்கல்
பால் பொங்குவதற்கு
ஓசை கிளப்புகிறாய்!
தமிழா!
உன் மனப்பானை
ஓலமிடுவது உனக்கு கேட்கிறதா?
சம்ஸ்கிருத சாமிகளுக்கும்
அவர்கள் தந்த சாதிகளுக்கும்
தமிழ் என்பது அவலங்களின்
ஓலம் தானே!
பொங்கலோ பொங்கல்
என்று முழங்குகிறாயே!
அந்த முழங்கல் தான்
நமக்கு இனிக்கும் தமிழ்ப்பொங்கல்!
அந்த மண்பானைக்குள்
படுத்திருக்கும்
தமிழின்
எழுச்சிப்பொங்கல்
எழும்வரை
இந்த குப்பை கூளங்கள்
குடமுழுக்குகள்
நடத்திக்கொண்டிருக்கட்டும்
கவலையில்லை.
வெறும் பக்திப்பூச்சிகளாய்
அர்ச்சனைத்தட்டுகளுடன்
வரிசையில் நின்றுகொண்டிருக்கட்டும்
கவலையில்லை.
லட்சம் லட்சமாய்
பாத யாத்திரை கூட செல்லட்டும்
பரவாயில்லை.
இவர்களுக்குள் இருக்கும் இந்துக்கள்
தமிழ் மொழியின் நெருப்பாறுகள்.
காவி நிறம் கொண்டு
இந்த கனற் பேரியாற்றின்
பஃறுளிகளை போர்த்தமுடியாது.
தமிழே எழு!
தமிழே விழி!
எனும் முரசுகள் ஆர்க்கும்
மனங்களுக்குள்
ராமனையும் அனுமாரையும்
கதைகளாகக் காய்ச்சி ஊற்றமுடியாது.
வில் புலி மீன் எனும்
வரலாற்றின் வெளிச்சங்களை
ரத்த சிவப்பணுக்களாகக்கொண்ட
தமிழர்களின் அந்த‌
"பொங்கலோ பொங்கல்"
விண்முட்டி முழங்கட்டும்!
பொங்கலோ பொங்கல்!

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக