ஞாயிறு, 31 ஜூலை, 2016

"போதும் புல்லாங்குழலே..."





"போதும் புல்லாங்குழலே..."
======================================================ருத்ரா

எங்கிருந்தோ
அந்த புல்லாங்குழல் ஒழுகுகிறது.
தேன் சுவாசம்.
மூச்சு முட்டுகிறது.
எல்லா உடற்கூடுகளும்
புழுக்கூடுகளும்
ராதாக்கள் தானா?


உள்ளே இருந்து
அக்கினியின் முந்தானை
வெளியே பட படக்கிறது.

எல்லாம் உருகுகிறது.
வானம் கூட‌
விழுதுகளாய்
செதில் செதில்களாய்
"நீல லாவா"வாய்
பிழ‌ம்பு பிசிறுக‌ளாய்
கொதித்து கொப்ப‌ளித்து
இற‌ங்குகிற‌து.

ம‌யிற்பீலி சூட்டிய‌வ‌ன்
எங்கிருந்து
இந்த‌ ம‌த்தாப்பை கொளுத்துகிறான்?

ப‌சுக்க‌ள் எல்லாம்
பொலி காளைக‌ளாய்
க்ராஃபிக் மார்ஃபால‌ஜியில்
மாய‌ம் புரிவ‌தில்
முதுகுத்த‌ண்டு முறுக்கலின்
உச்சகட்ட‌ ச‌ஹ‌ஸ்ரார‌ ச‌க்க‌ர‌ம்
சுழ‌ல்கிற‌தோ?

இசையின் ந‌யாக‌ராவில்
பாறைக‌ள் ப‌ளிங்குச்சிப்ப‌ங்க‌ளாய்
த‌க‌ர்ந்து போகின்ற‌ன.

ர‌த்த‌ சிவ‌ப்பு அணுக்க‌ள் கூட‌
புன்னாக‌ வ‌ராளியின் வ‌ழியாக‌
அந்த‌ பாம்பை
ஆலிங்க‌ன‌ம் செய்து கொள்ள‌
ஆரோக‌ண‌ அவ‌ரோக‌ண‌
ஜெண்டை வ‌ரிசையில்
த‌தும்பி த‌த்த‌ளிக்கிற‌து.

அதோ அந்த "செர்ன்"
அணுவுலை சுருள்வெளியில்
ப்ரொட்டான்கள்
மூச்சிரைத்துக்கொண்டு
ஒன்றை ஒன்று விரட்டிப்பிடித்து
உபநிஷத்துகள் சொன்ன
அந்த "பிரபஞ்சோப சமம்" நோக்கி
முத்தம் இட துடிக்கின்றன.
இசை பிழிகிறது.
நூற்றாண்டு நூற்றாண்டுகளாய்
காலச்சக்கைகளே மிச்சம்.

போதும்.
புல்லாங்குழ‌லே
சோமாக்க‌ள்ளை
நிறுத்து.

====================================================

முதுகுக்குப் பின்னே



முதுகுக்குப் பின்னே
==============================================ருத்ரா

நீண்ட நடைபாதை.
தூங்குமூஞ்சி மரங்கள்
இளஞ்சிவப்புப்பஞ்சுப்பூக்களை
பாதையில் துப்பி துப்பி
வைத்திருக்கின்றன.
கால்களில் விரைவு.
கடிகாரமுட்கள் தைத்த தையல் அது.
ஓட்டமும் நடையுமாய்..
சிஸ்டாலிக் டையஸ்டாலிக் சம்மட்டி அடிகள்
முதுகுக்குப் பின்னே
சொறிந்து சொறிந்து விரட்டுகிறது.
கால நீட்சிக்கு
ஒரு எம்டி கொடுத்த ப்ரஸ்கிரிப்ஷன்.
சூரியன் முகத்தில் ஊசி மழை.
வாக்கிங்..
நோயா? மருந்தா?
பசியா?உணவா?
வேர்த்த துளிகள்
தூர் வார இறங்கியிருக்கின்றன.
இடறும் சதுரம் துருத்திய கற்கள்.
எத்தும் குத்துமாய் முளைத்த‌
பற்களைப்போன்ற‌
பாதையிலும்...
நடை நடை..நடைதான்.
கரளை கரளையாய் சதையும் தோலும்
கண்டா முண்டா எலும்புகளுமாய்
வெறி பூசிய கண்ணும் உறுமல்களுமாய்
பனைமரங்கள் உயரத்துக்கு
பிசைந்த அந்த "மாடல்"களை
ஏன் வீசியெறிந்து விட்டது இயற்கை?
ஆனால்
அந்த உறுமல் முதுகுத்தண்டுகளில்
உருகி வழிகிறது.
கர்ர்ரென்று
ஒரு காக்காய் மூஞ்சியில்
சிறகை அடித்து விட்டுப்போகிறது.

===============================================


ஞானக்கூத்தன்



ஞானக்கூத்தன்
===============================ருத்ரா

சொற்களில்
மனதைக்கொண்டு
வெள்ளிமுலாம் பூசி
விடியலை
விளங்க வைத்தவர்.

வாக்கியங்களை
முறித்துப்போட்டு
வைப்பது அல்ல‌
கவிதை.

அந்த முறிவுகளில்
சமுதாயத்தின் நுண்வலி
அச்சு கோர்த்த‌
வார்த்தைகளின்
வழியாகத் துடிக்கவேண்டும்.

அத்தகைய‌
கவிதைத்துடிப்புகளை
நிறையவே
தந்துவிட்டுப்
போய் இருக்கிறார் அவர்.

"நாய்"பற்றிய
அவர் கவிதையில்
அவர் "ஒலிப்பதிவு" செய்த
குரைப்புகள்
இன்னும் அடங்கவே இல்லை.
யார் மீது யார் குரைக்கிறார்கள்?
அந்த "வர்ண" ஒலிக்கலவைகளில்
எந்த "அதிர்வு எண்ணை"
மறித்துக்கேட்பது?
"சவிதுர்வரேண்யத்தில்"
இருப்பது
குயிலா?
நாயா?
சூரியனைப்பார்த்துக் குரைப்பதா?
சூரியனைப் பற்றிக் குரைப்பதா?
ஒரு நூல் வெளியீட்டு விழாவில்
வேதங்கள் சொல்லும்
கிளிகள் பற்றியெல்லாம்
சொல்லியிருக்கிறார்.
ஒருவன் மொழி அடுத்தவன் காதில்
வெறும் குரைப்பொலி தானோ?
வள் வள் என்றாலும்
அதில் ரிக் வேதம் கேட்பவனே ஞானி
என்பதே
அவருக்கு எந்த வானத்திலிருந்தோ
ஒலித்த வேதம்!
கவிஞனின் பேனாவுக்குள்ளும்
கழுத்து நரம்பு புடைத்திருக்கிறது!

கேள்வி
எரிந்து கொண்டு தான் இருக்கிறது!
சிதையில் போய் படுத்துக்கொண்டவரை
பற்ற வைப்பதற்கும்
அவர் கவிதை தான் கிடைத்ததா?
வேண்டாம்.
பேனாவுக்கு கூட ஆத்மா உண்டு!
எதற்கு இந்த "ஆத்மஹத்தி"?

அவர் எழுத்துக்களின் ஒலி
வானிலும்  கேட்கிறது.
ஏனெனில்
"வானொலியே"
அவர் கையெழுத்து.
அவரது சிந்தனைகளின்
அடையாளம்
தெரிந்த இடம் அது.

புதுக்கவிதைகள்
பழசாகிப் போன‌
காலகட்டம் இது.
என்றும்
தன் கவிதைகளை
புதுக்கவிதைகளாகவே
விட்டுச்சென்றிருக்கும்
புதுமைக்கவிஞர் இவர்.

பேரப்பிள்ளைகள்
இவருக்கு
நெய்ப்பந்தங்கள் கொளுத்தலாம்.
இவர் கவிதைப்பிள்ளைகள்
மெய்யையே நெய்யாக்கி
மெய்யையே திரியாக்கி
மெய்யையே தீயாக்கி
ஒரு மெய் வெளிச்சம்
கொளுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

=============================================

வெள்ளி, 29 ஜூலை, 2016

"கபாலி படம் பார்த்தேன்"



"கபாலி படம் பார்த்தேன்"
===================================ருத்ரா

இந்த அடைமொழி
என்னோடு ஒட்டிக்கொள்ளாத வரை
நான் ஒரு வி.ஐ.பி இல்லை.
ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
வி.ஐ.பி என்றால்
விஸில் அடிக்கும் இம்பார்டெண்ட் பெர்ஸன்
என்று இன்று ஆகிவிட்டதோ!

சமூக நீதிக்கு அநீதி இழைக்கும்
ஒரு வரிக்கருவில்
முன்னூறு நானூறு கோடி ரூபாய்கள்
பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்
குவிக்க முடியும் என்றால்
இந்நேரம்
கூவத்துக்கரையோரம் கூட‌
மானிட‌நேசம் எனும் மகத்தான‌
இறைவத்துக்கு
கும்பமேளாக்கள்
கொடி கட்டிப்பறந்திருக்குமே!

கார்பரேட்  கலாசாரத்தின்
அழுகிய வண்ணங்கள் கூட‌
அழகிய வண்ணங்களாய்
"டீஸர்" மற்றும்
கட் அவுட் பால்குட‌
தள்ளுமுள்ளுகளின் நமைச்சல்களாக‌
மட்டுமே
இங்கே இப்படி
முடை நாற்றம் வீசிக்கொண்டிருக்குமா?

சாதி சமயங்களால் கூர் தீட்டப்பட்ட‌
ஆணவக்கொலைகளோ
நம் ஆத்மீகம் காக்க வந்த‌
ஆவணங்கள் என்று
மனசாட்சியின் மௌனநரம்புகளை
அறுத்தெறிகின்றன.
சினிமா அசுரன்
அதையும்  வசூல் ஆக்கலாம்
என்று தான்
"ரூம் போட்டு யோசித்துக்"கொண்டிருக்கிறான்.

கிரானைட் தாதுமணல் என்று
குத்தகைக்கொள்ளைகள்
ஆயிரம் ஆயிரம் பக்கங்களில்
அறிக்கைகளாக கிடக்கும்போது
அதனடியில்
ஜனநாயக நரபலிகளின்
கபாலங்களைப்பற்றி
கவலைப்படாத‌
இந்த வெற்றுச்சூறாவளிகள் கூட‌
"சினிமா செட்டிங்" களுக்குத் தான்
காமிராக்களால் குறி பார்க்கப்படுகின்றன.

அரசியல் சூட்சுமங்கள்
மனித இதயங்களின்
வாக்குப்பெட்டிக் கணிப்பொறிக்குள்
வெறும் லஞ்சத்தின் சோளப்பொறிகளாய்
தூவிக்கிடக்கையில்
இந்த இளையயுகம் தன்  கல்லறையை
"செகுவாரா"வை அச்சடித்த‌ வெறும்
டி ஷர்ட்டுகளில்
போர்த்திக்கிடக்கட்டும் என்ற‌
போர்த்தந்திரத்தை போர்த்திவைத்திருக்கும்
ஒரு மூளிப்பொருளாதாரத்தின்
மூர்க்கமான படையெடுப்பு தானே
இந்த "ஜிகினா குருட்சேத்திரங்கள்!"

இளம்புயலே!
நம்மை வெறும் எலும்புக்குப்பைகள் ஆக்கிய‌
வெள்ளை அடிமைத்தனக்கொடுநோய்
எனும் லுக்கேமியா தான்
இந்த மண்ணில் பரவிக்கிடக்கிறது.
ஒவ்வொரு பன்ச் டைலாக்கும்
உங்கள் அரசியல் அறியாமைக்காடுகளின்
மராமரங்களைத் துளைத்து வந்து
அறிவின் உயிர் குடிக்கும்
புல்லட் என்று எப்போது
புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

விடியல் வேண்டுமென்றால்
சிந்தனையை அப்பிக்கிடக்கும்
இருட்டு அகல வேண்டும்.
அதற்கு
அட்டைக்கத்திகளும்
பொம்மைத்துப்பாக்கிகளும்
மலிந்து கிடக்கும்
பொய்மைக்கிட்டங்கிகளின்
சினிமாவை பார்க்க‌
விளக்கு அணைக்கும்
இந்த இருட்டுகளை
துடைத்து அழித்தாக வேண்டும்.

அதற்கு
ஆக்ரோஷமான
துடைப்பங்கள் தேவையில்லை.
ஒரு மானுட ஆவேசத்தின்
தூரிகை
இந்த சினிமாவின் மீது
பட்டாலே போதும்.

===============================






செவ்வாய், 26 ஜூலை, 2016

காதல் இல்லாமல்......




காதல் இல்லாமல்......
==================================================ருத்ரா
என்ன சொல்லி
உன்னைக்காதலிக்க கண்ணே!
இந்த வார்த்தைகளுக்கெல்லாம்
துரு பிடித்து விட்டது.
வர்ணனைகள் எல்லாம்
சாயம் இழந்து
வெளுத்துப்போய் விட்டன.
அம்பிகாபதி அமராவதி
அனார்கலி சலீம்
இவர்களெல்லாம்
இன்னும் நம்
உதடுகளில்
உலவிக்கொண்டிருந்தாலும்
அவர்கள் எல்லாம்
காதலுக்காக சாதலை சந்தித்தவர்கள்.
சாவதற்காகவா காதலிக்க வேண்டும்.
எரிமலைக்கவிஞன் பாரதி கூட‌
கனத்த சோகத்தை
காறி உமிழ்ந்தானே இப்படி...
"காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்".......
வேண்டாம் அந்த "சொல்"
இதோ அவள் அருகில் வந்து விட்டாள்.
"வா..வா..வந்து விட்டாயா?
அது வந்து...
உன்னை நான் மிகவும் விரும்புகிறேன்.
அதோ அந்த தென்னை மரத்து
தூக்கணாங்குக்குருவிக்கூட்டுக்குள்
குருவிகளைப்போல‌
ஆசையோடு அன்போடு
அடைந்து கொள்வோம்.
நாம் மணம் புரிந்துகொள்ளலாமா?"
"ஏண்டா லூசு
இதச்சொல்லத்தான் கூப்டியா?
அப்புறம்
என்னை நீ காதலிக்கலையா?"
அவள் கேள்வியில்
அவன் குழம்பினான்.
"காதல் இல்லாமல் காதலிப்பதா?"
இதற்கு விடை காண‌
அந்த முருங்கை மரத்து
வேதாளத்தையும் விக்கிரமாதித்தனையும் தான்
தேடிப் போகவேண்டும்!

==========================================================

ஞாயிறு, 24 ஜூலை, 2016

தேடிக்கொண்டிருக்கிறேன்.



தேடிக்கொண்டிருக்கிறேன்.
==================================ருத்ரா இ.பரமசிவன்
அதைத்தான் இன்னமும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
கால்சட்டை போட்டுக்கொண்டு
கோலி விளையாடிய போது அவன்
மொழியை உடைத்து விடவேண்டுமே
என்ற வெறியைத்தேடினேன்.
தட்டாம்பூச்சி சிறகுகளை
காதோடு காதாக ஒட்டிவைத்துக்கொண்டு
கிர்ரென்று அது போடும்
ஓசைக்குள்
அர்த்தம் புரியாத‌
நியாய வைசேஷிகத்தையும்
பூர்வ உத்தர மீமாம்சங்களையும்
தேடினேன் என்று
சுருக்கம் விழுந்த வயதுகளில்
நினைவுகளை சவைத்துத் துப்பும்போது
தெரிந்து கொண்டேன்.
அவளிடம் என்ன இருந்தது என்று
தெரியாமலேயே
அவளிடம் இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறேன்.
வேறு வேறு கூட்டில்
இருவருக்கும்
ஆறேழு குஞ்சுகள்
சிறகடித்துக்கிடந்த போதும்
காதல் என்ற பிசின் எங்கோ
ஒட்டிக்கொண்டிருக்கிறதே
இன்னமும் அதைத் தேடிகொண்டிருக்கிறேன்.
தேடல் ஒரு கவிதை.
தேடல் ஒரு காதல்.
தேடல் ஒரு காமம்
தேடல் ஒரு கடவுள்.
இன்னும் எதையெல்லாம்
தேடவேண்டும்
என்று
கன்ன நரம்புகள் புடைக்க‌
தேடுவதும்
ஒரு தேடல்.
தேடலே அறிவு.
இப்படி தேடுவது என்பது
டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களின்
அமுத ஊற்றுகளின் சங்கிலி.
கடவுள் என்பவனுக்கு
இந்த ஊற்றுகளை
சுவைக்க முடியாது.
இந்த பிரபஞ்சத்தை வெற்றிலை மடித்து
பாக்கு புகையிலையோடு
நுண்ணிய கணிதத்தில் சுருட்டி
வாயில் போட்டு
"ப்ரேன் காஸ்மாலஜி" என்று
மூளையோடு குதப்பிக்கொள்ள‌
அந்த கடவுளுக்குள்
ஒரு "எட்வர்டு விட்டன்"
இறங்கித் தூர் எடுக்கவேண்டுமே.
"குவாண்டம் நுரை"கோட்பாடு வரை
சூன்யத்துள் சூன்யத்தையே
பாதாளக்கரண்டி போட்டுத்
தேடுதல் விஞ்ஞானம்.
"ஹிக்ஸ் போஸான்" தான்
அந்த ரகசியம் என்று
ஆற்றல் பிழம்பை உடைத்து
அந்த கொட்டையை எடுக்க‌
செர்ன் எனும் அணுவுலைக்குள்
நோண்டி நொங்கு எடுக்க
எலக்ட்ரான் பரோட்டன்கள்
வேர்க்க விறுவிறுக்க ஓடிக்க்ண்டிருப்பதும்
தேடல் தான்.
இப்படி
தேடிக்கொண்டிருப்பதில்
மனிதன் தன் கற்பனை எனும்
புண்ணாக்கு மூட்டையாகிப்போன‌
கடவுளையும்
எப்படி கட்டி இழுத்துக்கொண்டு ஓடுவது?
கும்பாபிஷேக நெய்ப்பிசுக்கில்
அவன் நாக்கினால் சப்பிக்கொண்டிருக்கட்டும்.
நான் தேடுவதில்
பிரபஞ்ச நரம்புக்கூட்டங்கள்
தாறு மாறாய் கலைந்து கிடக்கின்றன.
பேசாமல் அந்த தர்ப்பணங்களை
அவன் தின்று கொண்டிருக்கட்டும்.
துருப்பிடித்த ஸ்லோகங்களை
டிங்கரிங்க்கு அனுப்பி அல்லவா
நிமிர்த்திப்பார்க்க வேண்டும்.
கடவுளை கடவுளே
ஒரு நாள் கூட நிமிர்த்திவைத்து
பார்த்ததில்லை.
நானும் அதைத்தான் தேடுகிறேன்.
அவனுக்குப்பதில்
அவனுக்காக நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்...
அவன் என்னைத்தான் தேடுகிறான் என்று
தெரியாமல்
இன்னமும் நான் அவனை
தேடிக்கொண்டிருக்கிறேன்.

===============================================22.07.16


வெள்ளி, 22 ஜூலை, 2016

பூச்செண்டுகள்











பூச்செண்டுகள்
====================================================
ருத்ரா இ.பரமசிவன்


கண்ணீரும் கனவும் கொண்டு
துடைத்து வைத்த‌ பாதை.
விடியும்போது
இப்படி
வாசல் தெளித்துவைத்த பாதை.
நினவு நெளியல்களில்
நெய்த கோலங்கள்
இன்னும் விழ்வில்லை.
பறவைச்சிறகுகள்
நக்கிப்பார்த்து சொன்னது
"வானம் இனிக்கத்தான் செய்கிறது."
நம்பிக்கை
கசிவு வெளிச்சமாய்
விழுது இறக்குகிறது.
எதற்கு இந்த விடியல்?
அப்புறம்
எதற்கு மலையிடுக்கில்
அந்தி எனும்
ஒளி முடியல்?
புள்ளி வைத்து வைத்து
வாடிக்கையாக பால் ஊற்றும்
பால்காரி வைப்பாளே
அப்படி
இந்த வட்டச்சூரியன்களை
புள்ளி வைத்து வைத்து...
முடிக்கவே முடியாத ஒரு வாக்கியத்தை
முடக்க நினைக்கும்
நெஞ்சே!
அவன் வருவான்..
அவன் வருவான்..
போதும்!
ஒரு அடுகளம் நோக்கி
என்னை சங்கிலி கோர்த்து
இழுத்துக்கொண்டு
ஓடுவதெல்லாம் போதும்.
நீ சிரித்தாய்!
நானும் சிரித்தேன்!
அவ்வளவு தானே
அந்த இடைவெளிக்குள்
இத்தனை பிரபஞ்சங்களுமா
விழுங்கப்படவேண்டும்?
காலம் எனும்
நீள அகல ஆழங்கள்
போதும்..போதும்.
ஒரு கல்லறை கட்ட அல்லவா
ஓ காலமே
என் தோள்களில் வந்து
உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்.
உட்கார்ந்து கொள் கவலையில்லை!
கிழக்கு வயிறு
கிழிந்து கிழிந்து
போக்கு காட்டினாலும் கவலையில்லை!
எங்கள் சிரிப்புகள்
பிளந்து காட்டிய‌
அதோ அந்த பள்ளத்தாக்குகளில்
கிம்பர்லியின் வைரக்கிடங்குகள்
ஒரு நம்பிக்கையின்
கதிர்ப் பூச்செண்டுகளை
அசைத்துக்கொண்டே இருக்கின்றன.


====================================================

செவ்வாய், 19 ஜூலை, 2016

ஒற்றை ரோஜாப்பூ



ஒற்றை ரோஜாப்பூ
===================================================ருத்ரா

கட்டம் போட்ட டி ஷர்ட்டில்
கண்ணாடி பார்த்து
மீசை தடவி
சிகையை சீர் திருத்தி
சிரித்துக்கொண்டேன்.
இப்படி
யாருடனாவது உன் மனக்கண்ணாடியில்
புன்னகை செய்.
அது
பூவாக இருக்கலாம்.
புழுவாகவும் இருக்கலாம்.
மனிதனாகவும் இருக்கலாம்.
அண்டை அயல்..
அப்புறம்
ஆகாயம் கடல் என்று
உருண்டு புரள்.
உன்னைச்சுற்றி
புழுக்கூடு கட்டுவதே
கனவு என்பது.
ஒரு நாள்
உன் ரத்தஅணுக்கள் எல்லாம்
வர்ணபிரளயம் தான்.
அந்த சீமைக்கருவேல முள் கூட‌
அப்போது
ரோஜாக்களின் நந்தவனம்.

உன் புன்னகை
எங்கும் எதிலும்
பிரதிபலிக்கவேண்டும்.
வானத்தின் முகம் கூட‌
அதில்
தன் சுருக்கங்களை
நீவி விட்டுக்கொள்ளும்.
ஒரு புன்னகை
மனிதரிடையே தொற்றிக்கொள்ளும்
மகத்தான தொற்றுநோய்.
ஆம்.
அது மானிட மகிழ்ச்சியை
எல்லோரிடமும்
பரப்பிவிடும் நோய் தான்.

ஆனால் "உயிர்கொல்லிகளான"
வெறுப்பும்
வெறியும்
காழ்ப்பும்
கடுமையும்
இந்த நோய் தாக்கி
அழிந்தே போய் விடும்.

முகச்சிமிழிலிருந்து
ஒரு சிட்டிகை
புன்னகை போதும்.
இந்த பூமிக்கு
நோய் ஒழிப்பு எனும்
இம்மியூனிடி தரும்
இன்ப ஊற்று இது.

அய்யா தர்மம் போடுங்க சாமி
என்று
மானிடம் காக்க்
இறைஞ்சி
ஒரு நசுங்கிய அலுமினிய தட்டை
நீட்டுகிறேன்.

இரந்து கேட்பது அல்ல இது
இந்த பூமிக்கோளம்
ஒரு நசுங்கிய தட்டாய்
தடம் தொலைந்து போககூடாது
எனும்
அமைதி வேள்வியின்
அக்கினிப்புகைச் சுருள்
மனிதனில் கமழ்வதன்
கை ஏந்தல்கள் தான் இது.

"புன்னகை"எனும்
அந்த ஒற்றை ரோஜாவை மட்டும்
வீசியெறியுங்கள் போதும்.

இந்த உலகத்தின்
துப்பாக்கிகள் எல்லாம்
அதில் இறந்தே போகும்.

===================================================






செவ்வாய், 12 ஜூலை, 2016

அரங்கேற்றம்



அரங்கேற்றம்
=========================================ருத்ரா

கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு.
.............
.............
அடச்சீ..
எனக்கு இந்தப்பாட்டு தான்
தெரியும்.
வேற காதல் பாட்டெல்லாம் வராது..
வா..வா..சீக்கிரம்.
இந்த "மால்ல"
அட்வான்ஸா
டிக்கட் புக் பண்றதக்குள்ள
நான் பட்ட பாடு பெரிய பாடு.
ம்ம்ம் ..வா.வா...ரஷ் அப்
தியேட்டர்ல படம் போட்டுருவான்.

அரங்கத்துள்
"அகநானூறு ..மணிமிடைப்பவளம்"
அரங்கேற்றம் ஆரம்பித்தது.

===============================================

திங்கள், 11 ஜூலை, 2016

உற்றுக்கேள் !




உற்றுக்கேள்!
==============================================ருத்ரா

என் நிழலை உமிழ்ந்தது
யார் அல்லது எது?
சன்னல் கதவுகளை
விரீர் என்று திறந்தேன்.
சூரியன் கன்னத்தில் அடித்தான்.
வெகு கோடி மடங்கு
வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே!
உன் கருவுக்குள்
விதை தூவியது யார்?
நாங்கள்
ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி
உன்னில்
ஜனித்ததாய்
கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான்
இருக்கிறோம்.
உன் அப்பன் யார் அற்பனே?
பிக் பேங்க் என்று
ஆயிரம் அயிரம் கோடி
ஆற்றல் பிசாசு
ஆவி கொடுத்து
உருட்டித்திரட்டி
உரு பிசைந்த அண்டத்தில்
உன் பிண்டம் பிடித்த‌
கை எது?
கேள்வியின் திரி
நீண்டு கொண்டே இருக்கிறது.
மனித மூளையின்
முடிச்சு மண்டலங்களில் கூட‌
விடை வெடிக்கலாம்.
பிக் பேங் திரைக்கும் பின்னே
ஒரு தூரிகை அசைகிறது.
அந்த சவ்வு ஓவியங்களில்
"டி ப்ரேன்" பிரபஞ்சங்கள்
தெருக்கூத்து நடத்துகிறது.
அந்த விஞ்ஞான அரிதாரங்களை பூசிக்கொள்
அறிவுப்பிழம்பே!
அவதாரங்களின் மூட்டைகளை
அவிழ்த்துப்பார்த்து
அஞ்ஞானித்தது போதும்.
போ!
இறைவன் தேடும் இரைச்சல்களை நிறுத்து!
இந்த நிழலின்
ஒளியைத்தேடி ஒளிக்குள் ஒளிந்து போ!
ஒளி உன்னை உறிஞ்சக்கொடு.
இந்த நிழல்களின்
இதயத்துடிப்புகள் அதோ
கேட்கிறது பார்.
ஆயிரமாயிரம் பிரபஞ்சங்களையும்
அள்ளிப்பூசிக்கொண்டு
செரிபரம் செரிபல்லம் எனும்
மண்டைக்கருவூலத்து
உன் நியூரான்களுக்குள்
கேட்கிறது பார்
உற்றுக்கேள்.

================================================

சனி, 9 ஜூலை, 2016

"மாதொருபாகன்"




"மாதொருபாகன்"
====================================ருத்ரா

மாதொருபாகன் ஒரு நாவல் அல்ல.
நாம் யுகம் யுகமாய்
முகம் பார்த்த கண்ணாடி.
அதிசயமான ரசம் பூசிய கண்ணாடி.
அழகு முகம் காட்டும்போதே
அதன் அடியில் காட்டும்
நம் ஆபாசம்.
அழகு முகம் தெரிந்தபோது
நாமம் தீற்றினோம்.
விபூதியும் இட்டோம்.
அதில் நம் வக்கிரம் தெரிந்தபோது
பிம்பத்தை
அடித்து நொறுக்கினோம்.
கண்ணாடி நொறுங்கும்.
பிம்பம் நொறுங்குமா?
மலடி என்ற சொல்லே இங்கு நோயாகி...
மனித மனத்தின் வக்கிரங்களில்
அவன் ஆத்மாவை படுகொலை செய்து...
அந்த பட்டாக்கத்தி மீண்டும் நீண்டு
பெண்மையின் உண்மையை கசாப்பு செய்து..
கருவறுக்க வந்தது பற்றிய‌
நிகழ்ச்சிகளின் நிழலே அல்லது
நிழல் காட்டும் நிகழ்ச்சிகளே
"மாதொருபாகன்."
பெண்மலடு மட்டும் பெருந்தீயாகி
பெண்ணையே எரிக்கும்.
குந்திக்கு தெரிந்த அக்கினிமந்திரம்
குப்பத்து பெண்ணுக்கு
தெரியவில்லை என்றால்
குடிசையோடு அவள் எரிவாள்.
புராணங்களா?
புற்று நோய்க்கிடங்குகளா?
சமுதாயமே இந்த மனமுறிவில் முற்றி
சங்கிலியில் கிடக்கிறது.
மூளிச்சமுதாயத்துக்கு
அறிவின் தீ மூட்ட வந்தது
"மாதொரு பாகன்"
ஆண் மலடோ இங்கு புனிதம் ஆகி
இதிகாசமும் கூட ஆகிவிடலாம்.
இறைமை என்பது இரண்டல்ல ஒன்றே
என்று
அத்வைதம் சொன்ன‌ வாய் கூட‌
"நாரியே நரக வாயில்"
என்று கூசாமல் சொன்னது.
அன்னைக்கு
எந்திரம் தந்த ஸ்லோகங்கள்
அவள் கருப்பையே
தீட்டுகளின் பாவக்கடல் என்றன.
பெண்ணின் கண்ணியம்
சல்லடைக்கண்ணாய் துளைக்கப்படவோ
இங்கு பாஷ்யங்கள் செய்தனர்?
"மாதொருபாகன்"
இந்த ஆணாதிக்க காக்காய்வலிப்பு நரம்புகளை
நிமிர்த்தி முறுக்கி மருத்துவம் செய்து
மானுட அநியாயங்களை
மனசாட்சி எனும் தராசுமுள்ளின்
கழுவில் ஏற்றி தீர்ப்பு சொன்னது.
இதை வெறும் கட்டப்பஞ்சாயத்து ஆக்கி
சாதியும் மதமும் சாணை தீட்டிய‌
கொடுவாளின் கைப்பிடி
அரசின் கையில் எப்படி விழுந்தது?
ஓட்டுவங்கிகளுக்கு மட்டும்
தூண்டில் போடும்
அந்த கட்சிகளுக்கே வெளிச்சம்.
முருகனும் கணேசனும்
பார்வதி வயிற்றில் பிறக்கவில்லையே.
இருப்பினும்
தான் பாதி அவள் பாதி
என்று
காட்டினானே அந்த‌ "மாதொரு பாகன்."
இவர்கள் மட்டும்
பொன்னாத்தாக்களை இந்த‌
அவலப்புழுதியில் புரளவிட்டது
ஏன் என்று
பேனாவையே ஒரு திரிசூலமாக்கி
எழுதிக்காட்டினான்
இந்த மாதொருபாகன்!
பெருமாள் முருகன் அவர்களின்
எழுத்துகளின் கழுத்தில்
நச்சுக்கயிற்றை இறுக்கிய
நயவஞ்சக நாடகத்திற்கு
நீதி மன்றம் ஒரு திரை போட்டுவிட்டது.
இது இடைவேளையா?
முற்றும் அல்லது சுபமா?
என்பது
இந்திய மக்களின்
ஆளுமை உணர்வுகளின்
அடியில் கிடந்து
ஊற்று சுரக்கும் மனிதநேயங்களின்
ஆவேசத்தைப் பொறுத்தது.
"மாதொருபாகன்"
சிவ புராணம் மட்டும் அல்ல.
அதன் மண்
சிவந்த புராணமும் இதுவே!

==========================================